
இருண்டுகிடக்கும்
நாற்சுவர்களுக்கு நடுவில்
நான் புதைந்துகிடக்க விரும்பவில்லை.
எதையும் வெறும் அப்பாலுடன்
என்னால் நிறுத்த முடியவில்லை.
அதன்
அப்பாலுக்கு அப்பாலும்
பரந்து விரிந்து,
எல்லைகளற்ற எல்லைகளால்
நான் சூழப்பட முயற்சிக்கின்றேன்.
எல்லாவற்றையும் எதற்குள்ளாவது
அடக்கி வைப்பதில் நீங்கள் வெற்றி கண்டுவிட்டீர்கள்.
எல்லாவற்றையும் வெறும்
அப்பாலுடன் நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்.
அதற்கு அப்பாலும் அது செல்லட்டும்.
காரணம் கொண்டு மகிழாதீர்கள்,
அது நிரந்தரமற்றது, உண்மையற்றது.
காரணங்களின் முடிவில்
உங்களுக்கான துன்பம்
எதற்காகவும் மகிழுங்கள்,
நீங்கள்
இருப்பதற்காக(exist),
நிற்பதற்காக,
மூச்சுவிடுவதற்காகவும் மகிழுங்கள்,
சிரிப்பதற்காக சிரியுங்க்கள்,
பாடுவதற்காக பாடுங்கள்.
அது நிரந்தரமானது, உண்மையானது.
அந்த மகிழ்ச்சி
அப்பாலுக்கு அப்பாலும் பரந்து செல்லும்.
அதற்கு தடைகள் இல்லை,
சுவர்கள் இல்லை.
இயற்கையான எதையும்
அதன் போக்கில் விட்டுவிடுங்கள்.
அதன் திசையை
மாற்றுவதற்கான உங்கள் முயற்சி
உங்களிடம் இருக்கும் - எல்லாவற்றையும்
இழக்க செய்துவிடும்.
இயற்கையின்
அசைவுகள் எல்லாம் அழகிய நடனங்களே.
அவை
நடனங்களுக்காகவே ஆடப்படும் நடனங்கள்.
அது
அப்பாலுக்கு அப்பாலும் தொடர்ந்து செல்லும்.
பெண்களை
நிர்வாணமாக்குவது பற்றி அவனும்,
ஆண்களை
உள்வாங்குவது பற்றி அவளும்
சதா சிந்தனையில் துவளுகின்றார்கள்.
அது ஆணவத்தின் வழி.
உங்களை
வெறும் அப்பாலுடன்
அடக்கிவைத்ததன் வெளிப்பாடு.
ஆணவம்
எதையாவது அபகரித்துக்கொள்வதில்,
தன்னுடமையாக்கிக்கொள்வதில்
மகிழ்ச்சிகாணும்.
அன்பு
பங்கிடுவதில்,
தன்னிடமுள்ளதை இழந்துவிடுவதில்
மகிழ்ச்சிகாணும்.
அன்பு அப்பாலுக்கு அப்பாலும் செல்வது.
ஒளியப்ப் போல,
தென்றலைப் போல
பரந்து விரிந்து செல்வது.
அன்பில்
"அடுத்தவன்" என்பது செயலிழந்துவிடும்.
ஏனெனில், அன்பு
"நான்" என்ற "தன்" முனைப்பையே அறியாதது.
அதனால்,
அங்கு "அடுத்தவனும்" இல்லை.
அங்கு இருமைகள் இல்லை.
எல்லாம்
"அப்பாலுக்கு அப்பால்" செல்லும் ஒருமை தான்.
- அப்பாலுக்கு அப்பால் எப்பொழுதும் நிற்பவன்.

No comments:
Post a Comment