Friday, March 11, 2011

இரவுகளுக்கு விடை கொடுத்து விட்டேன்.....

என் இரவுகள் சிந்தனைகளின்

அலைகடலில் சிக்குண்டு விட்டது,

எந்த நங்கையராலும்

அந்த இரவுகள் களவாடப்படவில்லை,

அதனை எனக்குள் நானே களவாடி விட்டேன்.

இயற்பியல் விதிகளிலும்

வலுவுள்ளவை பரிணாமக் கொள்கைகள்,

அது எதனையும் விளக்கிவிடும்,

ஐன்ஸ்டீன் டார்வினிடம் எப்பொழுதோ தோற்றுவிட்டார்..........

என் மனக்கடல் அலைகள்

நுரை நுரையாய் எதையோ கரை சேர்க்கின்றது,

எதையோ நோக்கி விரைவாக நகருகின்றேன்.

அது எது என்று தெரியவில்லை.

எதையாவது விளையாடுவதிலும்

எதையாவது பற்றி சிந்திப்பது

விருபத்திற்குரியதாகிவிட்டது.

எதையாவது பார்ப்பதிலும் எதையாவது வாசிப்பது

விருப்பத்திற்குரியதாகிவிட்டது.

பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் என்னவென்பது பற்றியதாகவும்,

இயற்கைத் தேர்வின் வலு இழப்பு பற்றியதாகவும்

அந்த நுரைகள் இருக்கலாம்.........................

இருபத்து மூன்று வருட வாழ்வியலில்,

நான் அறிந்ததை

மிர்தாத் வெறும் 287 பக்கங்களில் சொல்லிவிட்டார்.

அவளுக்கும், அவர்களுக்கும்

நான் அடக்கி திருப்திப் படுத்திவிட முடியாதவனாக இருக்கலாம்.

காமுகர்கள் அப்பிடித்தான்.

மார்க்சியவாதத்தின் மீது

எனக்கு அடங்காத பற்று உண்டானதும்

அதனாலாக இருக்கலாம்.................

அவர்களுடன், எனக்கு இப்பொழுது

தீவிரமாக ஒட்டவில்லை.

அவர்களின்

சிரிப்பு, அழுகை, காதல், பிரிவு, சேர்வு

எல்லாம் நகைப்புக்கிடமாகிவிட்டது.

எல்லாம் பிரபஞ்ச இயக்கத்தில் வேடிக்கையானது..........................

அவர்கள் கூத்தாடும் பொழுதும்,

மகிழ்ச்சிக்குரிய விடயங்களாக சொல்லப்படுபவற்றில்

மூழ்கியிருக்கும் பொழுதும்,

நான்

அமைதியாக எங்கோ ஒரு மூலையில்,

எனக்குள் என்னை செலுத்துகின்றேன்.

அலைகடலென ஆர்ப்பரிக்கும் என்னை

எதுவும் கட்டிப் போட்டுவிடாது.

என் இரவுகளையும்

அந்த அலைகடலில் தொலைத்துவிட்டேன்.....................

-அடையாளம் தொலைந்து போனவன்.

No comments:

Post a Comment